இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்

இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.
இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்
x
இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்திருக்கிறது நுவரெலியா மாவட்டம். சின்ன இங்கிலாந்து' என்று அழைக்கப்படும் இயற்கை வளம் நிறைந்த பகுதி இது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரத்தில் அடர்ந்த வனமும், தேயிலைத் தோட்டங்களுமாக பார்வைக்கு எட்டிய தொலைவுவரை பச்சைப் பசேல் என்று பசுமையாய் காட்சியளிக்கிறது.
இந்த மலைப்பகுதியில்தான், அசோகவனம் அமைந்திருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போலவே வனம் முழுக்க அசோக மரங்கள் நிறைந்திருக்கின்றன. இங்குதான் ராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கி வரப்பட்ட சீதா தேவி சிறை வைக்கப்பட்டாள். அன்று ராவணனால் எந்த இடத்தில் சீதை சிறைவைக்கப்பட்டாளோ, அதே இடத்தில் பத்தினிக் கடவுளாக அருள்புரிகிறாள் சீதை. உள்ளூரில் இந்தக் கோயிலை ஆதிசக்தி சீதையம்மன் கோயில்' என்று அழைக்கிறார்கள். இங்கு அனுமனுக்கும் தனிச் சந்நிதி உண்டு.
சீதையம்மன் கோயில் அடர்ந்த வனத்தில் மலைச் சரிவில் காணப்படுகிறது. மலைக்கு மேலே உயரமான இடத்தில் கோயில் அமைந்துள்ளதால் எப்போதும் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மலையைத் தழுவிச் செல்லும் கார்மேகம், மழை, எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் குளிர்ந்த காற்று, அருவி என இயற்கையின் ரம்மியமான சூழலில் அம்மனைத் தரிசிப்பது அலாதியான அனுபவத்தை தருகிறது. கோயிலுக்குள் நுழையும்போது ராவண அருவி மலையிலிருந்து விழுந்து காட்டாறாக ஓடிக்கொண்டிருக்கிறது. சீதையம்மன் கோயிலுக்குப் பின்பு விழும் சீதா அருவி' ராவண அருவியுடன் கலந்து ஓடுகிறது. இந்த ஆறு எப்போதும் வற்றுவது இல்லை என்று கூறுகிறார்கள். அசோகவனத்தில் சீதை சிறைவைக்கப்பட்ட காலத்தில் இந்த அருவியில்தான் தினமும் நீராடியதாக சொல்கிறார்கள். இந்த ஆற்று நீர் எந்தவித சுவையும் இல்லாமல் இருக்கிறது. அதற்கு சிறைவைக்கப்பட்ட சீதையின் கண்ணீர் மற்றும் அவளது சாபமே காரணம் என்று கூறுகிறார்கள். கோயில் மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கோயிலில் இரண்டு சந்நிதிகள் காணப்படுகின்றன. வலதுபுற சந்நிதியில் அனுமன் அருள்புரிகிறார். இடது பக்கம் காணப்படும் சந்நிதியில் சீதை தேவி ராமர் மற்றும் லட்சுமணனுடன் அருள்புரிகிறாள். ஆற்றங்கரையில் அனுமனிடம் சீதா தேவி கணையாழியைப் பெறுகிற காட்சி சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலைக்குக் கீழே ஆற்றங்கரையில் காணப்படும் பாறைகளில் காலடி போன்ற இரண்டு பெரும் பள்ளங்கள் காணப்படுகிறது. அவை, அனுமனின் பாதத் தடங்கள் என்று கூறுகிறார்கள். சீதை சிறை வைக்கப்பட்ட இடத்திலேயே அவளை வணங்கினால் அனைத்து குறைகளும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டு பக்தர்களும் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்