தங்க கடத்தல் சம்பவங்களுக்கான கமிஷன் : "பணமாகவும், தங்கமாகவும் பெற்றுக் கொண்ட ஸ்வப்னா" - சுங்கத்துறை விசாரணையில் அம்பலம்

தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையில் கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷ் பினாமி பெயரில் பட தயாரிப்பில் ஈடுபட்டதும் பைசல் பரீத் போலீஸ் ஆபிஸராக சினிமாவில் நடித்ததாகவும் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தங்க கடத்தல் சம்பவங்களுக்கான கமிஷன் : பணமாகவும், தங்கமாகவும் பெற்றுக் கொண்ட ஸ்வப்னா - சுங்கத்துறை விசாரணையில் அம்பலம்
x
தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையில் கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷ் பினாமி பெயரில் பட தயாரிப்பில் ஈடுபட்டதும், பைசல் பரீத், போலீஸ் ஆபிஸராக சினிமாவில் நடித்ததாகவும் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் நாளொரு செய்திகள் வெளியாகி அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் பின்புலம், பண பலம் இவற்றால் இந்த கடத்தல் கும்பல்  தீவிரமாக செயல்பட்டு வந்தது அம்பலமான நிலையில் இப்போது சினிமா பின்புலத்துடனும் இவர்கள் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. 

பார்ப்பதற்கு ஹீரோ போல தோற்றம் கொண்ட பைசல் பரீத், துபாயில் பெரிய செல்வந்தராக வலம் வர காரணமே அவருக்கான சினிமாத்துறை செல்வாக்கு தான். துபாயில் கார் நிறுவனம், எண்ணெய் நிறுவனம், ஜிம் என பிஸினஸில் கொடி கட்டி பறந்துள்ளார் பைசல் பரீத்.... துபாயில் இவரின் ஜிம்மை திறந்து வைத்தது இந்தி நடிகர் அர்ஜூன் கபூர். அந்த அளவுக்கு சினிமா வட்டார தொடர்புகளுடன் இருந்துள்ளார் பைசல் பரீத். இதை வைத்து கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியான Gods Own Country என்ற படத்திலும் நடித்துள்ளார் அவர். அதில் சார்ஜாவில் உள்ள காவல்துறை அதிகாரி வேடம் பைசல் பரீத்துக்கு... 

கடத்தல் தங்கத்தில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து மலையாள திரையுலகில் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளது இந்த கும்பல். ஸ்வப்னா சுரேஷ், தன்னுடைய தோழியின் பெயரில் இதுவரை 4 படங்களை தயாரித்துள்ளது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இதேபோல் கடத்தல் தங்கத்தை கேரளாவில் உள்ள தங்க நகை கடைகளுக்கும் விநியோகம் செய்திருப்பதை கண்டறிந்த அதிகாரிகள், அவர்கள் குறிப்பிட்ட சில கடைகளில் இருந்து கணக்கில் வராத தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ்,  தூதரக அலுவலக தொடர்பு, தலைமை செயலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் உள்ள தனது தொடர்பை  பயன்படுத்தி கடந்த ஓராண்டில் 200 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்த உதவியதாக வெளியான தகவல் பரபரப்பை கூட்டியிருக்கிறது. 

ஒவ்வொரு கடத்தலுக்கும் 5 முதல் 15 லட்சம் ரூபாய் வரை கமிஷனாக பெற்றுள்ளார் சுவப்னா சுரேஷ். தனது கமிஷனை பணமாகவும், தங்கமாகவும் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. கண்ணேற்றுமுக்கு பகுதியில் பிரம்மாண்டமான வீட்டை கட்டும் பணியில் ஸ்வப்னா ஈடுபட்டு இருந்ததாகவும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஸ்வப்னாவின் கைவசம் இருந்ததாகவும் சுங்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தை பினாமி பெயரில்  முதலீடு செய்துள்ளாரா? என விசாரணை களத்தில் இறங்கியிருக்கும் அதிகாரிகள், ஸ்வப்னாவின் கணவர் மற்றும் அவரது தோழிகளின் வங்கி கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். 

ஸ்வப்னா, தனக்கு தாராளமாக கிடைத்த பணத்தை வைத்து சுயமாக தொழில் தொடங்க ஆர்வம் காட்டாமல், பிறரது தொழிலில் பங்குதாரராக இணைவதில் ஆர்வம் காட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இதனால் ஸ்வப்னாவுன் இணைந்து தொழில் நடத்தி வந்த பல நிறுவனங்களின் பங்குதாரர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதால் பலரும் தலைமறைவாகி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்