குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் - விரைந்து விசாரிக்க கோரிய கபில்சிபல் கோரிக்கை நிராகரிப்பு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என முறையிட்டார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக மத்திய அரசின் பதில் மனு தயாராகி விட்டது என்றும், இந்த பதில் மனுவை ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அப்போது பேசிய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே சபரிமலை விவகாரம் தொடர்பான தடை செய்யப்பட்ட மனுக்களை அரசியல் சாசன அமர்வு மார்ச் 16 ஆம் தேதி முதல் மீண்டும் விசாரிக்க உள்ளதாகவும் இந்த விசாரணை நிறைவடைந்த பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
Next Story

