தாஹிர் உசேன் வீட்டில் சிறுமி பாலியல் வன்கொடுமையா? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் புகைப்படம்
சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை கோரத்தாண்டவம் ஆடியது. இந்த வெறியாட்டத்தில் இதுவரை 45 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி கஜூரி காஸில் உள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் வீட்டின் அருகே கால்வாயில் அங்கித் சர்மா என்ற உளவுத்துறை அதிகாரி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது வீட்டு மாடியில் பெட்ரோல் குண்டுகள் இருந்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார், தொழிற்சாலைக்கும் சீல் வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக தாஹிர் உசேன் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
தாஹிர் உசேன் வீட்டில் இஸ்லாமிய கும்பலால் 16 வயது இந்து சிறுமி ஜோதி பட்டிதார் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. பேஸ்புக் பக்கத்தில் தமிழில் இந்த செய்தியை பதிவிட்டு சிலர் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். டுவிட்டரில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் சிறுமி ஜோதி பட்டிதார் பாலியல் வன்கொடுமை என்ற செய்தியை புகைப்படத்துடன் பலர் பதிவிட்டுள்ளனர். அதையே பலர் எடுத்து தமிழில் பதிவிட்டுள்ளனர்.
ஜோதி பட்டிதார் புகைப்படத்தை ஆராய்ந்தபோது, அது மத்தியபிரதேச இருந்து செயல்படும் பாஸ்கர் டாட் காம் என்ற இணையதளத்தில் வேறு ஒரு செய்திக்கான புகைப்படமாக இடம்பெற்றிருந்தது. மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டம் பர்சுசுலியா கிராமத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
சிறுமி ஜோதி பட்டிதார் அவரது வீட்டில் சடலம் எரிந்த நிலையில் கிடந்தார். இது தற்கொலையாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் சிறுமி ஜோதி பட்டிதார் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டது, உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
ஜோதி பட்டிதாரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றிய செய்தி கடந்த 25ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி உள்ளது. யூ-டியூப்பில் அந்த செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தாஹிர் உசேன் வீட்டில் சிறுமி ஜோதி பட்டிதார் இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்ற செய்தி தவறான தகவல்...
மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் புகைப்படத்தை டெல்லி வன்முறையின்போது ஜாகிர் உசேன் வீட்டில் நடந்த சம்பவம் போன்று, தவறான தகவலை சமூக வலைதளங்கில் பலர் பதிவு செய்தி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான தகவல்...
Next Story

