நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரம் : புதிய தேதி அறிவிக்ககோரும் சிறை நிர்வாகம் மனு தள்ளுபடி
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரி திஹார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு தில்லி பாட்டியாலா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் இர்ஃபான் அகமது ஆஜராகி தற்போதைய நிலையில் குற்றவாளிகளின் எந்த மனுவும், எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை என்று தெரிவித்தார். எனவே, டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த 7 நாள் கெடு, உச்சநீதிமன்றத்தின் சத்ருகன் சௌகான் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள 14 நாள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது 4 ஆவது குற்றவாளியான பவன் சீராய்வு மனு தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டிய நீதிபதி, பவன் சீராய்வு மனு தாக்கல் செய்தால் என்ன செய்வது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை தாமதமடுத்த குற்றவாளிகள் திட்டமிடுவதாக நிர்பயா பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரும் திஹார் சிறை நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Next Story

