குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் - 5 நீதிபதி கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அரசியல் சானச அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் - 5 நீதிபதி கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
x
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட 144 மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் நடைபெற்றது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், தங்களுக்கு தரப்பட்ட 60 மனுக்களுக்கு பதில் மனு தயாராக உள்ளதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் ஏன் அனைவரும் மனு தாக்கல் செய்கின்றனர் என்ற காரணத்தை அறிய முடியவில்லை என்றும்,  இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்த தலைமை நீதிபதி போப்டே, அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல், ஒருதலைபட்சமான உத்தரவை பிறப்பிக்கப் போவதில்லை என தெரிவித்தார். 

மனுதாரர் தரப்பி​ல் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், 
தேசிய குடிமக்கள் பதிவேடு, வரும் ஏப்ரல் முதல் நடைபெறவுள்ளது என்றும், எனவே அதற்கு முன்பு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்என வாதிட்டார். 

வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், அந்த  நடைமுறையை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரினார். 

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 
குடி​யுரிமை திருத்தச் சட்டத்து​க்கு  தடை விதிக்க முடியாது என தெரிவித்தார். 

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தடைவிதிப்பது சட்டத்தையே தடைசெய்வது போல் ஆகிவிடும் என மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 

இதனைத் தொடர்ந்து, புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 80 மனுக்களுக்கு, நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள்,  அனைத்து  வழக்குகளும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தனர். 

3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காது என்றும், அனைத்து உத்தரவுகளையும்  5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வே  பிறப்பிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்​வு தெரிவித்துள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது,  உத்தரவு பிறப்பிக்க  உயர்நீதிமன்றங்களுக்கு தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்