தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் முழு வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. கேரளாவின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வாகனங்கள் ஓடவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவனந்தபுரம் ரயில் நிலைய சந்திப்பு தம்பானூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளும் சாலைகளும்  வெறிச்சோடி காணப்படுகின்றன. சில ஆட்டோக்களும் தனியார் வாகனங்களும் மட்டுமே இயங்கி வருகின்றன.சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் எவ்வித இடையூறுமின்றி சென்று கொண்டிருக்கின்றன.

திருவனந்தபுரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளை காவல் துறை வாகனத்தில் அழைத்து செல்லும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பத்துக்கும் மேற்பட்ட காவல் துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 

தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் ரயில் சேவை வழக்கமாக உள்ள நிலையில், தனியார் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 


அரசு பேருந்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், போலீசார் அரசு பேருந்துகளின் போக்குவரத்துக்கு உரிய பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தனியார் பேருந்துகள் ஓடாததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட தலைவர்கள் கைது 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


கலபுருக்கி பேருந்து நிலையத்தில் போலீஸ் குவிப்பு
நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் கலபுருக்கி பேருந்து நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.



"டுரோன் கேமராக்களை பயன்படுத்தி கண்காணிப்பு" 
முழு அடைப்பு போராட்டத்தால் கர்நாடகாவில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. குடகு மாவட்டத்தில் மட்டும் அரசு பேருந்து மீது கல் எறிந்ததைத்தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. 


இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கண்காணிப்பு பணிக்காக பிரத்தியேகமாக டுரோன் கேமராக்களையும் பயன்படுத்தி வருகின்றனர்

மேற்கு வங்கத்தில் ரயில் மறியலால் பரபரப்பு

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள ஷியாம்நகரில் காஞ்சரப்பாரா ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.



மேற்கு வங்கத்திலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு பராகனா பகுதியில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கரிஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கொல்கத்தா நகரிலும் பேருந்துகள் இயங்கவில்லை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ரயில் நிலையங்கள் மற்றும் ஜாதவ்பூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன. 

ஹவுராவில் போராட்டக்காரர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 






Next Story

மேலும் செய்திகள்