ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் : நாட்டின் பல்வேறு பகுதியில் மாணவர்கள், எதிர்க்கட்சியினர் போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதியில் மாணவர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் : நாட்டின் பல்வேறு பகுதியில் மாணவர்கள், எதிர்க்கட்சியினர் போராட்டம்
x
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து விடுதியில் இருந்த மாணவர்களை மர்ம நபர்கள் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிய சம்பவம், நாடு முழுவதும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். சார்பு பேராசிரியர்களும் இந்த தாக்குதலுக்கு காரணம் என டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் ஆயிஷே கோஷ் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட அவர், மாணவர்களை தாக்கப்பட்ட போது  காவலர்கள் தடுக்கவில்லை என்றும், தனது தலையில் இரும்பு கம்பியால் மர்ம நபர்கள் தாக்கியதாகவும் கூறியுள்ளார். 

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். இதில் கைகளில் தீப்பந்தம் ஏந்தியும் , முகமூடி அணிந்தும் ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர். மேற்கு  வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் வீதியில் திரண்ட ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் உருவ பொம்மைகளை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து,  போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக் கழக மாணவர்களை திமுக எம்.பி  கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். முகமூடி அணிந்த மர்ம நபர்களால் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர்களை திமுக எம்.பி. திருச்சி சிவா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தாக்குதல்  நடத்தப்பட்ட மாணவர்களின் விடுதி அறைகளை நேரில் பார்வையிட்ட அவர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே மாணவர் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க, டெல்லி காவல் இணை ஆணையர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாகவும், சிசிடிவி பதிவுகளை சேகரிப்பதாகவும் டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்