விரைவு ரயில், புறநகர் மின்சார ரயில் நேருக்கு நேர் மோதல்

கச்சிக்குடாவில் இண்டர் சிட்டி விரைவு ரயிலும், புறநகர் மின்சார ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கச்சிக்குடா மற்றும்  மலக்பேட் ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர்  மின்சார ரயிலும், கர்னூல் இன்டர்சிட்டி விரைவு ரயிலும் நேருக்கு நேர் மோதி  விபத்துக்கு உள்ளானது. சற்று நேரத்திற்கு முன்பு, கர்னூல் இன்டர்சிட்டி ரயில் நான்காவது ரயில்வே பாதையில்  வந்து கொண்டிருந்த நிலையில், புறநகர் மின்சார ரயிலும் அதே பாதையில் வந்துள்ளது.  ரயில்வே சிக்னல் கோளாறு காரணமாக 2  ரயில்களும் நான்காவது டிராக்கில் வந்த நிலையில் ஒன்றுடன் ஒன்று பலத்த சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 30 பேர் படுகாயமடைந்து உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். புறநகர் ரயிலின்  8 பெட்டிகள் கவிழ்ந்த நிலையில், அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு என்ஜினுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட புறநகர் மின்சார  ரயில் என்ஜின் ஓட்டுநரை  மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தின் காரணமாக கச்சிகுடா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் சிக்னலில் ஏற்பட்ட கோளாறா அல்லது அங்குள்ள பணியாளர்கள் அலட்சியமா எனரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்