அயோத்தி வழக்கு தீர்ப்பு : நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில் நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு வரும் 11 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசத்தின் அலிகார் நகரில் மொபைல் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்க மற்றும் ஆட்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன், ஹரித்துவார், உத்தம் சிங் நகர் மற்றும் நைனிடால் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள போலீசார் முழு உஷார் நிலையில் இருக்க அம்மாநில காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.ஜம்முவில் உள்ள பத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவும் அமலுக்கு வந்துள்ளது.மும்பை மாநகரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும், சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், மதுக்கடைகள் மூடப்படும் எனவும் மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.ஐதராபாத் நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் அஞ்சனி குமார் தெரிவித்துள்ளார். தேவையான இடங்களில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Next Story