சிபிஐ காவலில் சிதம்பரம் சொன்னது என்ன...? : பரபரப்பு தகவல்கள்...

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடந்ததாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது சிதம்பரம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிபிஐ காவலில் சிதம்பரம் சொன்னது என்ன...?  : பரபரப்பு தகவல்கள்...
x
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்ஜாமீன் கோரிய சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை சிபிஐ அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார், சிதம்பரத்தை ஆகஸ்ட் 26-ம் தேதிவரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அன்னிய முதலீடுகள் தொடர்பான கோப்புகளை வாரியத்தில் இடம்பெற்றிருந்த ஐபிஎஸ் அதிகாரிகள்  கவனித்து வந்ததாகவும், அனைத்து கோப்புகளையும் பார்க்க போதுமான நேரம் தனக்கு இருக்கவில்லை என்றும் 

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் இடம்பெற்றிருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனைகளின் படியே தான் நடந்து கொண்டதாகவும் சிபிஐ விசாரணையின்போது சிதம்பரம் தெரிவித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்னிய முதலீடுகள் தொடர்பான ஒப்புதல் அளித்ததில் முறைகேடுகள் ஏதாவது நடைபெற்று வந்தால் நிச்சயமாக அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் இருந்த அதிகாரிகளுக்கு அது குறித்து தெரிந்து இருக்கும் என்றும் அவர் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள இந்த வாக்குமூலத்தை வைத்து, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில்,  அப்போது பதவியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும், அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சிபிஐ காவலில் உள்ள ப. சிதம்பரம் தனது ஓய்வு நேரத்தை புத்தகங்களுடன் செலவிடுவதாகவும், அண்மையில் முழுமையாக வாசித்து முடிக்காத ஒரு புத்தகத்தை மீண்டும் அவர் தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டதாகவும், தற்போது காவலில் இருந்தபடி அதனை அவர் படித்து வருவதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவலில் உள்ள சிதம்பரத்தை அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். அவர்களிடம் அவர் வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள உணவகத்தில் இருந்து சிதம்பரத்திற்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. தனக்கு நல்ல டீ வேண்டும் என அவர் கேட்டு குடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்