இந்திய உணவு கழகத்தில் மாயமான 2 லட்சம் கிலோ அரிசி : சிபிஐ விசாரித்த விநோத வழக்கு - திருடியவர்கள் கைது

இந்திய உணவு கழகத்தில் இருந்து 2 லட்சம் கிலோ அரிசி ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள் மூலம் திருடப்பட்டதாக கூறப்படும் ஒரு விநோத வழக்கை சிபிஐ விசாரித்ததில், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய உணவு கழகத்தில் மாயமான 2 லட்சம் கிலோ அரிசி : சிபிஐ விசாரித்த விநோத வழக்கு - திருடியவர்கள் கைது
x
அசாம் மாநிலம் சால்சாப்ரா சரக்கு ரயில் முனையத்தில் இருந்து, மணிப்பூர் கொய்ரெஞ்சியில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு கழக கிடங்குக்கு 9 லட்சத்து 19 ஆயிரத்து100 கிலோ அரிசி எடுத்து செல்லப்பட்டது. 

2016, மார் 7இல் இருந்து 22ஆம் தேதிக்குள், 27 லாரிகளில் அரிசையை கொண்டு செல்ல ஜெனித் என்டர்பிரைசஸ் என்ற தனியார் போக்குவரத்து நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.  இந்நிலையில் சுமார் 9 மணி நேரத்தில் செல்லக்கூடிய, 275.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த இடத்திற்கு, 2 மாதங்களுக்கு பின்னரே  அரிசி சென்றடைந்துள்ளது. 

இதை ஆய்வு செய்த போது, 16 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 84 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 2 லட்சத்து 60 ஆயிரம் கிலோ அரிசி மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்தியபோது, பல விநோத தகவல்கள் கிடைத்தன. 

விசாரணையில் லாரிகள் பழுதானதால், மாற்று லாரிகள் வரவழைக்கப்பட்டு வந்ததால் தாமதம் என்ற லாரி போக்குவரத்து நிறுவனம் தெரிவித்தது. இதை தொடர்ந்து லாரிகளின் பதிவு எண்களை அதிகாரிகள் சோதித்தபோது, அவைகள் லாரிகளே அல்ல என தெரிந்தது. அந்த பதிவு எண்கள் ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், தண்ணீர் லாரிகள், பஸ், மாருதி வேன் மற்றும் கார்கள் போன்ற வாகனங்கள் என்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2 லட்சத்து 60 ஆயிரம்  கிலோ அரிசியை ஏற்றி அனுப்பாமலேயே, அனுப்பிவிட்டதுபோல மோசடி செய்து, திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. லாரி நிறுவனம் 16 லாரிகளுக்கு போலி 'பில்'கள் போட்டதும், இதற்கு உணவு கழக கிடங்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. 

இந்நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் சி.பி.ஐ., இந்திய உணவு கழக அதிகாரிகள் ஆஷிஷ்குமார் பால், ரஜ்னிஷ்குமார் குப்தா, போலி கையெழுத்து போட்ட லாரி நிறுவன பிரதிநிதி ஜான்சன், பொய் வாக்குமூலம் கொடுத்த லாரி நிறுவன உரிமையாளர் சோய்பம் சுர்ஜித்சிங் ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்