ராஜினாமா கடிதம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? : சபாநாயகர் தரப்பு பரபரப்பு வாதம்

கர்நாடக சட்டசபையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதிருப்தி எம் எல் ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று பரபரப்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
ராஜினாமா கடிதம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? : சபாநாயகர் தரப்பு பரபரப்பு வாதம்
x
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள், சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இன்று காலை பரபரப்பான வாதம் நடைபெற்றது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தனது வாதத்தில், பேரவை தலைவரின் முடிவு நீதிமன்றத்துக்கு கட்டுப்பட்டது என வாதிட்டார். அதிருப்தி எம்எல்ஏகள் சிலரின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறேன் என சபாநாயகர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. 

இதை மறுத்த ரோத்தகி, இந்த வழக்கிற்கும், சபாநாயகர் முடிவுக்கு சம்மந்தம் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார். கர்நாடகாவில் தற்போது மைனாரிட்டி அரசு  உள்ளதாகவும்,   ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் இருப்பதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கு பெறவைக்க  முயற்சி நடப்பதாகவும் எம்எல்ஏக்கள் தரப்பில்  கூறப்பட்டது. தங்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் அரசை காப்பாற்ற நினைக்கிறார் என அதிருப்தி எம்எல்ஏக்கள்  குற்றச் சாட்டினர். ஒரு கட்சியில் இருக்க பிடிக்காமல் தான் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கிறார்கள் என்றும், அவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள சொல்வது எந்த வகையில் நியாயம் என்று  ரோத்தகி வாதிட்டார். 

பிடிக்காத கட்சியின் கொறடா உத்தரவை மதிக்க சொல்வதன் மூலம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ரோத்தகி கூறினார். சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வியிடம் கேள்வி எழப்பிய நீதிபதிகள், 11 எம்எல்ஏக்கள் நேரில் வந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்னரும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். சபாநாயகர் தரப்பு வாதத்தில்,  ராஜினாமா கடிதத்தின் பின்னணியை ஆராய வேண்டிய கடமை உள்ளதாக கூறப்பட்டது. தகுதி நீக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ராஜினாமா செய்கிறார்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது என்றும் சபாநாயகர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அரசியல் சாசன அதிகாரங்களை நினைவுபடுத்தும் சபாநாயகர்,  அதனை பின்பற்றாமல் இருப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதையடுத்து, வாதங்களை முன் வைத்த சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிசேக் சிங்கி, சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிட்ட போது நீங்கள் மகிழ்ச்சியாக சென்றீர்கள் என்று அபிசேக்கை பார்த்து கூறினர். 

அந்த வழக்கில், இடைக்கால சபாநாயகரை நியமித்து 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது இதே உச்சநீதிமன்றம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நினைவூட்டினர். எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள்  தங்களது வாதங்களை பரபரப்பாக முன்வைத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்