கர்நாடக காங். கூட்டணியை சேர்ந்த 13 எம்.எல்.ஏ. க்கள் ராஜினாமா
பதிவு : ஜூலை 07, 2019, 08:30 AM
பா.ஜ.க. ஆட்சி அமைக்க தயார் ஆகி வரும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசை காப்பாற்ற இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
கர்நாடக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக 13 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். மேலும் அதன் நகலை ஆளுநரிடம் அளித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். நேற்று ராஜினாமா செய்த 11 பேரும் தனிவிமானத்தில் மும்பைக்கு சென்று தங்கியுள்ளனர். இதனிடையே அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர், ராஜினாமா கடிதம் மீது செவ்வாய்கிழமை தான் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விடுமுறையில் உள்ளதால், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு செவ்வாய்கிழமை வரை சிக்க​்​ல இல்லை என கூறப்படுகிறது. வரும் செவ்வாய் அன்று ஏற்கனவே ராஜினாமா செய்த 2 பேர் உள்பட 13 பேரின் ராஜினாமாவை ஏற்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியின் பலமும் பா.ஜ.க.வின் பலமும் 105 ஆக மாறும். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு உறுப்பினரின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். தற்போது காங்கிரஸ் கூட்டணியின் பலம் 118 ஆகவும், பா.ஜ.க.வுக்கு 105 உறுப்பினர்கள் ஆதரவும் உள்ளது. இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா, பா.ஜ.க. ஆட்சி அமைக்க தயாராக உள்ளதாகவும், பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் நிலையில் எடியூரப்பா தான் முதலமைச்சர் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கே.சி. வேணுகோபால் நேற்றிரவு பெங்களூரு வந்துள்ள நிலையில், நாளை அமெரிக்காவில் இருந்து முதலமைச்சர் குமாரசாமி நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் 12 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், அன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் வலியுறுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக காங்கிரஸ் கூட்டணி அரசு தப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.