அகத்திய மலைக்குச் சென்ற முதல் பெண்...

இதுவரை பெண்களுக்கு அனுமதி கிடையாது... ஆனால், இந்தாண்டு முதன்முறையாக, ஒரு பெண் காலடி வைத்த அகத்தியமலை குறித்து, தற்போது பார்க்கலாம்...
அகத்திய மலைக்குச் சென்ற முதல் பெண்...
x
அகத்தியர் மலை ஏற்றத்திற்காக, வனத்துறையினர் டிக்கெட் புக்கிங்கை ஓப்பன் செய்த, 2 மணி நேரங்களிலேயே  அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. 41 நாட்கள், அகஸ்திய கூடம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு, 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 41 நாட்களுக்கு  4 ஆயிரத்து 100 பேர் மட்டுமே செல்ல முடியும். மலையேற்றப் பாதை என்பதால், பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் என, எதுவும் அங்கே அமைக்க முடியாத நிலை உள்ளது. 

பொங்கல் நாளான ஜனவரி 14ம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை, இங்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அகஸ்தியர் குறுமுனி சிலைக்கு, சிவராத்திரி சமயத்தில், கானி மக்கள் சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். கேரள வனத்துறை, சிவராத்திரிக்கு முன்னதாக 41 நாள்கள் ட்ரெக்கிங் செல்ல அனுமதி வழங்குகிறது. ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு, கானி பழங்குடியின மக்கள் தான் வழிகாட்டியாகவும் உள்ளனர். 

திருவனந்தபுரத்தில் இருந்து போனக்காடு சோதனைச் சாவடிக்கு, 60 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். இங்கு, சுகாதாரமான கழிப்பிடம், குளிக்கும் வசதியை வனத்துறையினர் செய்து வைத்துள்ளனர். காலை கடன்களை மட்டும் முடித்து விட்டு பயணத்தை துவக்கலாம். வழியில் தென்படும் அருவிகளில் குளித்து கொள்ளலாம். 
 
அனுமதி சீட்டுகள் சரி பார்க்கப் பட்டு கொண்டு செல்லும் பைகளில் மது பாட்டில், பிளாஸ்டிக் பைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்று ஆராய்ந்த பின்னர் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கிறது. மிக கடினமான பயணம் என்பதால், 14 வயதை தாண்டிய ஆண்கள், உடல் திடம் மிக்கவர் மட்டுமே ட்ரெக்கிங் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தனி நபர்களுக்கு அனுமதி இல்லை. 

இங்கு கடந்தாண்டு வரை பெண்களுக்கு அனுமதியில்லை. கனி பழங்குடியினர் பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், வனத்துறையினர் 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மலையேற்றத்திற்கு செல்லலாம் என்று கூறியுள்ளனர். கடந்தாண்டு, கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அமைப்பு, இந்த அகஸ்திய கூடத்திற்கு பெண்களின் வழிபாட்டிற்கு அனுமதி வேண்டி வழக்கு தொடர்ந்தனர். மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் பெண்களின் வழிபாட்டிற்கு அனுமதிக்க உத்தரவிட்டார். 

இந்த நிலையில், இந்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும், மலப்புரத்தைச் சேர்ந்த Dhanya Sanal என்ற பெண், நூறு பேர் அடங்கிய குழுவில் இடம் பெற்று, சமீபத்தில் மலையேறி வந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்