3-வது நாளாக தொடரும் சபரிமலை போராட்டம்

உச்சகட்ட பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய மேலும் இரு பெண்கள் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
3-வது நாளாக தொடரும் சபரிமலை போராட்டம்
x
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து வயது பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பலத்த எதிர்ப்பையும் மீறி குடும்பத்தினருடன் சபரிமலை ஏறிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் மாதவி கோயிலுக்கு செல்லாமலேயே திரும்பினார். 
அவரை தொடர்ந்து சென்ற ஆங்கில நாளிதழின் பெண் பத்திரிகையாளர் சுஹாசினி ராஜ், சபரிமலைக்கு செல்ல முயன்றார். மாரக்கூட்டம் வரை சென்ற அவருக்கு, ஆண் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சுஹாசினி ராஜின் முயற்சி தோல்வி அடைந்தது. 

3-வது நாளான இன்று தெலங்கான மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் செய்தி வாசிப்பாளர் கவிதா, சமூக செயற்பாட்டாளர் ரஹேனா பாத்திமா ஆகிய இரு பெண்கள் உச்சகட்ட பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர். பாதுகாப்பு கருதி கவிதா, பாதுகாப்பு படை சீருடை  அணிந்திருந்தார். இரு பெண்களும் 200 அதிரடிப் படையினர் பாதுகாப்பு வளையத்துடன் அழைத்துச் சென்றனர். எப்படியும் அவர்கள் சன்னிதானத்திற்குள் சென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கியதும், அங்கிருந்த ஆண் பக்தர்கள் சரணம் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

நடைபந்தலை இரு பெண்கள் நெருங்கியதும், அங்கிருந்த ஆண் பக்தர்கள், கீழே அமர்ந்து, முழக்கங்கள் எழுப்பினர். கவிதா, ரஹேனா பாத்திமாவை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என அவர்கள் மறுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களுடன் ஐஜி ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்க மறுத்து ஐயப்ப பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். 

இதனை தொடர்ந்து கவிதா மற்றும் ரஹேனா பாத்திமாவுடன் ஐஜி ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு பெண்களும் சபரிமலைக்குள் சென்றே தீருவோம் என உறுதிகாட்டினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு வழியாக திரும்பி செல்ல இரு பெண்களும் சம்மதித்தனர். இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் இரு பெண்கள், கோயிலுக்குள் செல்லாமலேயே திரும்பினர். 

Next Story

மேலும் செய்திகள்