மும்பையில் புகழ் பெற்ற வி.ஐ.பி. : சித்தி விநாயகர்

விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பாக மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்
மும்பையில் புகழ் பெற்ற வி.ஐ.பி. : சித்தி விநாயகர்
x
மும்பையில் புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோயில், லக்ஷ்மன் விது மற்றும் தேவ்பாய் படேல் (Laxman Vithu and Deubai Patil)ஆகியோரால், நவம்பர் 19ம் தேதி, 1801ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலின் மேற் கூரை 3.7 கிலோ தங்கத்தால் ஆனது. ஆண்டுக்கு, சுமார் 15 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. இவரின் மொத்த சொத்து மதிப்பு 1000 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.  

மும்பையின் பிரமாதேவி பகுதியில், எஸ்.கே.போலேமார்க் எனும் இடத்தில் இந்த கோயில் உள்ளது. ஆரம்பத்தில், சிறிய செங்கல் கட்டிடமாக இருந்தது. இன்று மும்பையின் செல்வச் செழிப்பான கோயிலாக மாறிவிட்டது. 

சித்தி விநாயகர் விக்ரஹம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இது, சுமார் 2 அடி 6 அங்குலம் உயரமும், 2 அடி அகலமும் உடையது. இந்த விநாயகர் விக்ரகத்தின் தனிச் சிறப்பு, இதன் தும்பிக்கை வலது புறமாக வளைந்திருக்கிறது.

மேல் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் இந்த விநாயகர் விக்ரஹம் தாங்கி நிற்கிறது. கீழ் வலது கையில் ஜப மாலையும், இடது கையில் ஒரு கிண்ணம் முழுவதும் "மோதகமும்" உள்ளது. வலது தோளிலிருந்து இடது வயிறு வரை ஒரு பாம்பு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட விசித்திரமாக இந்த விநாயகருக்கு நெற்றிக்கண் உள்ளது. வினாயகர் விக்ரஹத்தின் இருபுறமும் ரித்தி மற்றும் சித்தி என்ற பெண் தெய்வங்களின் விக்ரஹங்கள் காணப்படுகிறது. 

விநாயகர் விக்ரகத்திலிருந்து பின்புறமாக முளைத்து வருவது போன்ற தோற்றத்தில், ரித்தி மற்றும் சித்தி விக்ரகங்கள் இருக்கும். இந்த இரண்டு பெண் தெய்வங்களுடன் விநாயகர் காட்சியளிப்பதால், இது சித்தி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ரித்தி மற்றும் சித்தி என்ற பெண் தெய்வங்கள் வெற்றி, செல்வச் செழிப்பு மற்றும் வளமான வாழ்வை குறிக்கிறது. 

மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயகர் கோயில் உண்டியலில், தினசரி 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக குவிந்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2009-2010ஆம் ஆண்டில் தினசரி உண்டியல் வசூல் 12 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது வருமானம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

சங்கடஹர சதுர்த்தி, பஞ்சாமிர்த பூஜை, சத்ய நாராயண பூஜை, லகு ருத்ர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தினந்தோறும் இரவு ஏழரை மணிக்கு நடைபெறும், ஆரத்தி நிகழ்ச்சி கண் கொள்ளாக் காட்சியாகும்... செவ்வாய் தோறும், அதிகாலை 4 மணிக்கு துவங்கும் தரிசனம், நள்ளிரவு வரை நீடிக்கிறது. 

குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். வி.ஐ.பி. விநாயகர் மட்டுமின்றி இவர், பாலிவுட் பிரபலங்களுக்கு, ஆபத்பாந்தவனாகவும் இருக்கிறார் இந்த பிள்ளையார்.

Next Story

மேலும் செய்திகள்