கே.வி.ஆனந்த் மறைவிற்கு திரைபிரபலங்களின் இரங்கல்

கே.வி.ஆனந்த் மறைவிற்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் மறைவிற்கு திரைபிரபலங்களின் இரங்கல்
x
கே.வி.ஆனந்த் மறைவிற்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அவரது  மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். கே.வி.ஆனந்தை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ள ரஜினி, அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் எனக் கூறியுள்ளார். 
 
கே.வி.ஆனந்த் மறைவுக்கு சினிமாவுக்கு பேரிழப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தளராத தன் முனைப்பினால் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர் என நினைகூர்ந்துள்ளார். 

பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்தின் மறைவுக்கு மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கே.வி. ஆனந்த், நம் பார்வையைவிட்டு நீங்கினாலும், நம் இதயங்களில் இருந்து நீங்கமாட்டார் என்றும், அவரது ஆன்மா சாந்தியடைய இரு கரம் கூப்பி, பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தது, தனக்கு வேதனை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் தடம்பதித்த கே.வி. ஆனந்த், இயக்குநராக மிளிர்ந்து சாதனைப் படைத்தார் என்றும், அவரது மறைவு கலைத்துறைக்குப் பேரிழப்பு என்றும் கூறி உள்ளார். 

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்தின் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் இரங்கற்பா வெளியிட்டுள்ள அவர், கே.வி. ஆனந்த் தனது பாடல்களை ரத்தினமாய் மாற்றியதாகவும், திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கியதாகவும் கூறி உள்ளார். ஒளியாய் கே.வி. ஆனந்த் வாழ்வார் என்றும் வைரமுத்து தனது இரங்கற்பாவில் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்