சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திருப்பம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரே அவருக்கு எதிராக அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திருப்பம்
x
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரே அவருக்கு எதிராக அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

சின்னத்திரை நடிகை சித்ரா, நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணம் தற்கொலையா? கொலையா? என பல கட்டமாக விவாதம் நடந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை தற்கொலை என சித்ராவின் மரணத்தை உறுதி செய்தது. 

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் டிசம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனிடையே தனக்கும் சித்ராவுக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை, தன் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையில்லை என கூறியிருக்கும் ஹேம்நாத், ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க கூடாது என சித்ராவின் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர். இதனிடையே ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பரான சையது ரோஹித்தும் அதிரடியாக இந்த வழக்கில் நுழைந்தது தான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

ஹேம்நாத்துக்கு ஆரம்ப காலங்களிலேயே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறிய சையது ரோஹித், பணம், நகைகளை பறித்துக் கொண்டு அவர்களை கை கழுவி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும்புள்ளிகளுடன் உள்ள தொடர்புகளை வைத்துக் கொண்டு முக்கியமான படங்கள் வரும் போது டிக்கெட் வாங்கிக் கொடுத்ததன் மூலமே சித்ராவிற்கு ஹேம்நாத் அறிமுகமானதாக கூறியிருக்கும் அவர், சித்ராவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவரை பல வழிகளிலும் கொடுமைப்படுத்தி வந்தார் என்றும் கூறியிருப்பது ஹேம்நாத் மீதான புகாருக்கு வலு சேர்த்திருக்கிறது.

சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஹேம்நாத் துன்புறுத்தினார் என்பதும் சையது ரோஹித் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.

சித்ராவின் தலையில் காயம் இருந்ததாக ஹேம்நாத் தன்னிடம் கூறியதாகவும், சித்ராவின் மரணத்திற்கு பிறகு ஹேம்நாத் தன்னிடம் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அவர்.

சித்ரா குறித்து ஹேம்நாத்தின் தந்தை அவதூறு கிளப்புவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதாலேயே தான் இந்த விவகாரத்திற்குள் வந்ததாக கூறியிருக்கிறார் ரோஹித். mநடந்ததை எல்லாம்  பொதுவெளியில் தயங்காமல் சொல்வேன் என கூறியிருக்கும் அவர், சித்ரா போன்ற துணிச்சலான பெண்ணுக்கு நடந்த அநீதிக்கு தன்னாலான உதவி இது என்றும் உருக்கமாக கூறியிருக்கிறார் அவர்.

இதனிடையே சித்ராவின் மரணத்திற்கு காரணம் ஹேம்நாத் அவர் மீது வைத்த சந்தேகமே என வழக்கை விசாரித்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளரும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருப்பதால் இந்த வழக்கு சரியான திசை நோக்கி செல்வதாக சித்ராவின் மரணத்தால் கலங்கி தவித்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்