ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்த விஜய்...கொரோனா காலத்தில் அவசர சந்திப்பு... காரணம் என்ன?

கொரோனா பரபரப்புக்கு மத்தியிலும், நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது, விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய ஆலோசனை என்ன...? விவரிக்கிறது இந்த தொகுப்பு...
ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்த விஜய்...கொரோனா காலத்தில் அவசர சந்திப்பு... காரணம் என்ன?
x
தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியல் களம் அப்படியே மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்...கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். ரஜினியும் அரசியலுக்கு வருவது உறுதி என்ற தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்... இவர்கள் வரிசையில், நடிகர் விஜய் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்கள், அவரும் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில், தற்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ஆம் தேதி பனையூரில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய், பல்வேறு ஆலோசனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மகாராஷ்டிரா மாநில நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார். கூட்டத்தில் கலந்துக்கொள்ள இயலாத நிர்வாகிகளுடனும், தொடர்ந்து காணொலி காட்சி மூலம் விஜய் பேசி வருகிறார். 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையே விஜய் இலக்காக வைத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், தற்போது அரசியல் தொடர்பாக எந்த போஸ்டர்களும் அடிக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. எந்த கட்சியையும் சார்ந்து கருத்து கூற வேண்டாம் என்றும், எல்லோரும் நமக்கு வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, ரஜினியின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று விஜய் பேசியதாக கூறப்படுகிறது. அரசியல் களத்தில் நடிகர் ரஜினிக்கு கிடைக்கும் வரவேற்பை ஒரு பாடமாக எடுத்து செயல்பட வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தற்போதைய காலத்தில் அரசியல் களத்தில் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்பதை ரஜினியின் அரசியல் பிரவேசம் மூலம் கணிக்க முடியும் என விஜய் வலுவாக நம்புவதாக கூறப்படுகிறது. அடுத்ததாக பிரதான கட்சிகள் குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியுள்ளார். அதாவது, அதிமுக, திமுக என்ன செய்யும் என்பதை நாம் அறிந்ததே, அதனால், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசத்தை கவனித்து நமது நகர்வுகள் இருக்க வேண்டும் என்று விஜய் கூறியதாக தெரிகிறது. ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்திப்பது இயல்பானது தான் என்றாலும், கொரோனா காலத்தில் அவசரமாக நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் எதிர்கால திட்டங்களை மிக சரியாக விஜய் தீட்டியுள்ளதன் வெளிப்பாடே இந்த சந்திப்புகள் எனவும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்