பண மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கைது: விசாலின் கால்ஷீட் இருப்பதாக கூறி பணம் பெற்றார்
தனது திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விசாலின் கால்ஷீட்டை பெற்றுள்ளதாக கூறி மோசடி செய்த பிரபல இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கத்தில் செயல்படும் ஜேகே புரொடக்ஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து வருபவர் நரேஷ் கோத்தாடு. இவருக்கு திரைப்பட இயக்குனர் அசோகன் என்பவர் மூலம் சாலிகிராமத்தை சேர்ந்த இயக்குனர் வடிவுடையான் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகமாகியிருக்கிறார். ஸ்ரீகாந்தை வைத்து சவுக்கார்பேட்டை, பரத்தை வைத்து பொட்டு உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய வடிவுடையான், விசாலை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும், அவரின் கால்சீட் இருப்பதாகவும்
தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாடுவிடம் கூறியுள்ளார்.
இதற்கு ஆதராமாக விசாலுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக போலி பத்திரம் ஒன்றையும் வடிவுடையான் காண்பித்துள்ளார். இதனை நம்பிய நரேஷ் கோத்தாடு, 41 லட்சம் ரூபாயை வடிவுடையானுக்கு கொடுத்திருக்கிறார். 2 ஆண்டுகளாகியும் படம் எடுக்காமல் , பணத்தையும் தராமல் வடிவுடையான் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஒப்பந்தம் போட்டிருப்பதாக காண்பிக்கப்பட்ட பத்திரமும் போலியானது என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நரேஷ் கோத்தாடு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இயக்குனர் வடிவுடையானை கைதுசெய்துள்ளனர்
Next Story

