"ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது" : தர்பார் விழாவில் ரஜினி பேச்சு

ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது : தர்பார் விழாவில் ரஜினி பேச்சு
x
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், பல நேரங்களில்  விமர்சித்திருந்தாலும் இசை வெளியீட்டு விழாவிற்கு அரங்கம் தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். 70வது வயதில் காலடி வைக்கும் இந்த ஆண்டின் பிறந்தநாள் தனக்கு முக்கியமான பிறந்தநாள் என்றும்,  தனது பிறந்த நாள் அன்று ஊரில் இருக்க மாட்டேன் என்றும், அன்றைக்கு ஏழை அநாதைகளுக்கு ரசிகர்கள் உதவ வேண்டும் என்றும் ரஜினி தெரிவித்தார்  தனது  அண்ணன் தன்னை படிக்கச் சொல்லி
வற்புறுத்தியதாகவும், ஆனால், விருப்பம் இல்லாமல் பணக்கார மாணவர்களோடு சேர்ந்து ஊரை சுற்றுவது , படம் பார்ப்பது என்று இருந்ததாகவும் ரஜினி நினைவுகூர்ந்தார்.  160 ரூபாய் கடன் வாங்கி அண்ணன் தேர்வு கட்டணம் செலுத்திய சூழலில் தேர்வெழுதினால் தேர்ச்சி அடைய மாட்டேன் என்பதால் வீட்டிற்கு தெரியாமல் தமிழ்நாட்டிற்கு ரயில் ஏறி புறப்பட்டதாகவும் ரஜினி குறிப்பிட்டார். ரயிலில் வந்து சென்னையில் இறங்கியபோது பயணச் சீட்டை தொலைத்து விட்டதாகவும், பரிசோதகர் அபராதம் கேட்டபோது கூலித் தொழிலாளர்கள் சிலர் தனக்கு உதவ முன்வந்ததாகவும் ரஜினி தெரிவித்தார். இருந்தாலும் பரிசோதகர் தன்னிடம் இருந்த பணத்தை பார்த்த பிறகு  நம்பிக்கை வந்து  அபராதம் வாங்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கலைஞானம் தன் மீது நம்பிக்கை வைத்து கதாநாயகனாக்கினார், அவர் நம்பிக்கை வீண் போகவில்லை என்றும், ரசிகர்கள்  தன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 16 வயதினிலே பரட்டை கதாபாத்திரம்தான் தன்னை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். 
கோடம்பாக்கம் சாலையில் அயல்நாட்டு காரில் கால்மேல் கால்போட்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும்,  இத்தாலிய வாகனத்தை வாங்கி , அயல்நாட்டு ஓட்டுநரை ஓட்ட வைத்து நேராக கோடம்பாக்கம் சென்றதாகவும் ரஜினி தெரிவித்தார். தன்னை தயாரிப்பாளர் ஒருவர் அவமதித்த இடத்தில் தனது காரை நிறுத்தி் சிகரெட்டை பற்ற வைத்ததாக குறிப்பிட்ட ரஜினி, நாம் வாழ்வில்  வெற்றியடைய  நேரம், காலம்,  சந்தர்ப்பம், சூழ்நிலை ஆகியவை முக்கியம் என்றார். அரசியல் , ஊடகம் , சமூக வலைதளம் என அனைத்திலும் எதிர்மறை வசனங்கள் அதிகமாகி விட்டது என்று குறிப்பிட்ட ரஜினி, அன்பு செலுத்துவோம் , சந்தோசமாக இருப்போம் என்று கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்