இளமை துள்ளும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திரைப்பயணம்...

இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பிறந்ததினம் ஜூன் 13.
இளமை துள்ளும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திரைப்பயணம்...
x
தமிழ்த் திரையுலகின் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், சகோதரி மகனாக அறியப்படும் இவர், ஆரம்ப காலங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில், பணியாற்றினார். பின்னர், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார்.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 1993 ஆம் ஆண்டு வெளியான ஜெண்டில்மேன் திரைப்படத்தில், பின்னணி பாடியதன் மூலம், திரையுலகில் கால்பதித்தார். 

வசந்தபாலன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு, வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல்படத்திலேயே தனது இசையால், எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். 

அஜீத்தின் கிரீடம் 2007 , தனுஷின் பொல்லாதவன் 2006, அங்காடித்தெரு 2009, மதராசப்பட்டிணம் 2010,  ஆடுகளம் 2010, உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஜி.வி.பிரகாஷின் இசை பேசப்பட்டது. 

2008 ஆம் ஆண்டு குசேலன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம், இளம்வயதிலேயே ரஜினியின் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றார்.

குறிப்பாக, பீரியட் படங்களின் வரிசையில் வந்த மதராசப்பட்டினம் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்-இன் இசை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தொடர்ச்சியாக, தெய்வத்திருமகள் 2011, மயக்கம் என்ன 2011, பரதேசி 2012 , தலைவா 2013, ராஜா ராணி 2013,  சைவம் 2014, காக்கா முட்டை 2015, விசாரணை 2016 உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்ததன் மூலம் பிரபலமானார்.

விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லியின் இயக்கத்தில், வெளிவந்த தெறி திரைப்படம், ஜி.வி.பிரகாஷ் க்கு 50 ஆவது திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில், இடம்பெற்ற பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனது.

குறுகிய காலத்தில் 50 க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

தான் இசையமைத்த படங்களிலும், பிற இசையமைப்பாளர்களின் படங்களிலும் பல பாடல்களையும் பாடியிருக்கிறார், ஜி.வி.பிரகாஷ்

பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பென்சில் படத்தில் ஜி.வி.பிரகாஷ், நடிகராக அறிமுகமானார். எதிர்பாராதவிதமாக அப்படம், வெளியாக தாமதமானதால், அதற்கு முன்பாக, டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடித்த த்ரிஷா, இல்லனா நயன்தாரா படத்தில், அவரே இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் அப்ளாஸ் அள்ளியது. 

அதேநேரம், திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களுக்காக, மிகுந்த விமர்சனத்திற்கும் உள்ளாகியது, இத்திரைப்படம். தற்கால இளையோர் கூட்டத்தின் ரசனையைப் பிடித்து, அதற்கேற்ற கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடிப்பதால், ஜி.வி.பிரகாஷ், நடிகராகவும் வெற்றிகண்டிருக்கிறார்.

விர்ஜின் மாப்பிள்ளை, 4ஜி, அடங்காதே மற்றும் ஐங்கரன், கோபம் உள்ளிட்ட பல படங்கள் தற்போது, ஜி.வி.பிரகாஷ் கைவசம் உள்ளன.

தனது இசையில், ஏராளமான பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகி சைந்தவியை, நீண்ட நாள்கள் காதலித்து கரம்பிடித்தார், ஜி.வி.பிரகாஷ். 2013 ல் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இளம் வயதிலேயே, தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக, தடம்பதித்திருக்கிறார், ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்