எப்படி இருக்கிறது காலா?

ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் உருவான காலா பற்றிய முதல் பார்வை.
எப்படி இருக்கிறது காலா?
x
எப்படி இருக்கிறது காலா? - முதல் பார்வை

மும்பை தாராவியின் முடி சூடா மன்னனாக திகழ்கிறார் கதாநாயகன் காலா என்கிற கரிகாலன். அவரை மீறி அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர் எதுவும் செய்ய முடியாத நிலை. எல்லா இடங்களில் ஆளும் கட்சி ஜெயிக்க தாராவியில் மட்டும் காலா ராஜ்யம். அந்த தாராவியை நவீன வசதிகளுடன் கூடிய பகுதியாக மாற்ற நினைக்கும் வில்லன் அரசியல்வாதி ஹரி தாதா.  அதை எதிர்த்து போராட மக்களை ஒன்று திரட்டுகிறார் காலா. இவர்களில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் கதை. 

தாராவியை நவீன மயமா மாற்றுவது நல்ல விஷயம் தானே? அதை செய்பவர் ஏன் வில்லனாகிறார்? என்று தோன்றலாம். அதை தாராவி மக்களுக்கு மட்டும் இல்லாமல், படம் பார்ப்பவர்களுக்கும் புரிய வைக்கிறார் இயக்குனர் பா. இரஞ்சித். வசனங்களில் அவ்வளவு கூர்மை. தாராவியை  நவீனமயமாக்க  என்ன என்ன செய்ய போகிறோம் என்று விளக்கும் காட்சியில் அனைவருக்கும் 220 சதுரடியில் வீடு, இலவச பள்ளி-ன்னு அடுக்கி கொண்டே போகும் போது, GOLF மைதானம் வரும் என்கிறார்கள். "Golf மைதானத்திற்கு சராசரியாக  50 ஏக்கர் நிலம் தேவை. அவ்ளோ இடத்த மைதானத்துக்கு  ஒதுக்கிவிட்டு வாழுறதுக்கு 220 சதுரடி வீடா?" என்று காலாவின் மகன் கேள்வி கேட்கிறார். அட சரிதானேன்னு மக்களுக்கு தோணும். இது போல் படம் நெடுக நச் வசனங்கள். மக்களுக்கு புரிய வைக்கும் வசனங்கள் மட்டுமில்லை, அரசியல் வசனங்களும் இருக்கிறது.

ரஜினியை காட்டி இருக்கும் விதம் அசத்தல். அறிமுக காட்சியில் காற்று வேகமாய் அடிப்பது, முகத்தின் பாகங்களை ஒவ்வொன்றாக ஸ்லோ மோஷனில் காட்டுவது. இப்படி எதுவுமே இல்லாமலேயே கெத்தாக  காட்டியிருக்கிறார் இரஞ்சித். 

படம் முழுக்க காதல், ரகளை, கோபம், ஆக்ரோஷம் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் ரஜினி. மனைவியிடம் வெட்கத்துடன் ஐ லவ் யூ சொல்வது அழகு. தளபதி படம் போல் காவல் நிலையத்தில் வரும் ஒரு காட்சி, இடைவேளை காட்சி, மழையில் சண்டை, என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் மாஸ் காட்சிகளுக்கு பஞ்சமில்லை. 

வில்லன் நானா படேகர் புது ரகம். சிவாஜியின் ஆதி, பாட்ஷா ஆண்டனி கலந்து செய்த கலவை என்று சொல்லலாம். காலா யார் என்று கேட்கும் பேத்தியிடம் "ராவணன். பத்து விதமா யோசிக்க கூடிய ராவணன்" என சொல்லும் காட்சியிலும், காலாவுடன் நேருக்கு நேர் விவாதிக்கும் காட்சியிலும் வில்லன் எந்த ரகம் என புரிந்துவிடும்.

காலா மனைவியாக வரும் ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, வத்திக்குச்சி திலீபன், என அனைவரு‌ம் காலாவில் பளிச். பாடல்கள்  மிகப் பெரிய பலம்.  சந்தோஷின் பின்னணி இசை கூட கதை சொல்கிறது. 

படம் ஆரம்பித்த முதல் 20 நிமிடங்கள் மெதுவாக நகர்கிறது. அதன் பிறகு வேகமெடுக்கும் திரைக்கதையில், க்ளைமாக்ஸ் காட்சி வரை சுவாரஸ்யம் குறையவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்